ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா? (Lord, Are You Going to Wash My Feet?).

அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது,  அவன் அவரை நோக்கி: ஆண்டவரே,  நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான் (யோவான் 13:6).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/9G3KC1t1tu4

இயேசு கிறிஸ்து, கடைசி இராப்போஜனத்தின் வேளையில் தன் சீஷர்களுடைய பாதங்களைக் கழுவினார். பொதுவாக அந்நாட்களில் மத்திய கிழக்கு நாடுகளில் அடிமைகள் தங்கள் எஜமான்களுடைய பாதங்களையும்,  விருந்தாளிகளுடைய பாதங்களையும் கழுவுவது வழக்கம். காரணம் பாதரட்சைகள் அணியாமலும்,  சாதாரண செருப்புகளை அணிந்து தூசிகள் நிறைந்த இஸ்ரவேலின் சாலைகளில் நடந்து வந்து வீடுகளில் பிரவேசிக்கும் போது கால்களைச் சுத்திகரிக்க வேண்டியிருந்தது. ஆனால் இங்கு எஜமானன்,  சர்வலோக ஆண்டவர்,  ஒரு சாதாரண அடிமையைப் போல தன் சீஷர்களுடைய பாதங்களைக் கழுவினார். அவருடைய தாழ்மையை இது வெளிப்படுத்துகிறது. மனுஷகுமாரன் ஊழியங்கொள்ளும்படி வராமல்,  ஊழியஞ் செய்ய வந்தார் என்ற வார்த்தையின்படி,  தான் வேலைக்காரன்,  அடிமை என்பதைக் கர்த்தர்  வெளிப்படுத்தினார். கர்த்தருடைய ஜனங்கள் கிறிஸ்து இயேசுவிலிருந்த தாழ்மையின் சிந்தையைக் கற்று அதன்படி வாழ நம்மை அர்ப்பணிக்கவேண்டும்.

அவர் சீஷர்களுடைய பாதங்களைக் கழுவுவதற்கு வேறொரு காரணமும் காணப்பட்டது. மனுஷகுமாரன் மகிமைப்படும் படியான வேளையும்,  காட்டிக்கொடுக்கப்படபோகிற வேளையும் வந்தது என்பதை சீஷர்களிடம்  கர்த்தர் வெளிப்படுத்தத் துவங்கினார். உடனே தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று சீஷர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று. இயேசு அவர்களை நோக்கி,  புறஜாதியாரின் ராஜாக்கள் ஆளுகையும் அதிகாரமும் செலுத்துகிறவர்களாய் காணப்படுகிறார்கள்.  உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது,  உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும்,  தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கவேண்டும்,   நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன் (லூக்கா 22:24-27) என்று கூறினார். யார் பெரியவன் என்பது இயேசுவின் சீஷர்களுக்குள் காணப்பட்ட பொதுவான பிரச்சனையாகவே இருந்தது (மாற்கு 9:33-34,  லூக்கா 9:46,  மத்தேயு 18:1,  20:20-26). ஆகையால் கர்த்தர் பணிவிடைச்செய்கிறவனே பெரியவன் என்று கூறி,  பணிவிடைக்காரனைப் போல அவர்களுடைய பாதங்களைக் கழுவத் துவங்கினார். அப்படியே நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள் என்பதற்கு உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன் என்றார். அவருடைய பாதங்களை யாரும் கழுவவில்லை. கர்த்தருடைய பிள்ளைகளும் நமக்குள் பெரியவன் சிறியவன் என்று யாருமில்லை என்ற சிந்தையோடு வாழவேண்டும். நாமெல்லாரும் ஒரே தகப்பனுடைய பிள்ளைகள்,  ஒரே ரத்தத்தினால் கழுவப்பட்டவர்கள்,  ஒரே பிதாவின் வீட்டில் வாழப்போகிறவர்கள் என்ற உணர்வோடும்,  ஒருவரையொருவர் கனம் பண்ணுவதிலும்,  பணிவிடை செய்வதிலும் முந்திக்கொள்ளுகிறவர்களாய் வாழ நம்மை அர்ப்பணிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

இயேசு பேதுருவின் பாதங்களைக் கழுவ வந்த வேளையில்,   அவன் நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவக்கூடாது என்றான். இயேசு அவனை நோக்கி நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றவுடன்,  பேதுரு ஆண்டவரை நோக்கி என் கால்களைமாத்திரமல்ல,  என் கைகளையும் என் தலையையும்கூடக் கழுவவேண்டும் என்றான்.  இயேசு அவனிடம் முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும்,  மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான் என்றார். இங்கு ஆண்டவர் பாதங்களைக் கழுவுதல் என்பது அனுதின சுத்திகரிப்பிற்கு ஒப்பாயிருக்கிறது என்பதை வெளிப்படுத்தினார். இரட்சிப்பு என்ற முழுகுதலின் அனுபவம் ஒருமுறையாய் காணப்பட்டாலும்,  சுத்திகரிக்கப்படுதல் என்பது அனுதின அனுபவமாய் காணப்படவேண்டும் (Salvation is one time experience but sanctification is everyday experience). கர்த்தர் திருவசனம் என்னும் தண்ணீரினால் நம்மைச் சுத்திகரித்து,  நம்மைப் பரிசுத்தமாக்குகிறார்(எபே.5:26). ஆகையால் கர்த்தருடைய ஜனங்கள் கர்த்தருடைய வசனத்தினால் நம்மை அனுதினமும் கழுவி,  பாவங்களற நம்மை சுத்திகரித்து,  பரிசுத்தமாய் வாழ்வதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.

இயேசு,  ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால்,  நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள் என்று சீஷர்களிடம் கூறியும்,  ஆதிசபையின் நாட்கள் துவங்கியபின்பு அப்போஸ்தலர்கள் ஒருவரும் ஒருவர் பாதத்தை ஒருவர் கழுவினார்கள் என்பதை வேதத்தில் நாம் வாசிக்கமுடியவில்லை. மாறாக  பரிசுத்தவான்களுடைய கால்களை உத்தம விதவைகள் கழுவினார்கள் (1 தீமத். 5:5-10) என்று அவர்கள் செய்த பணிவிடைகளைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது.  அதுபோல மேல்வீட்டறையில் என்ன நடந்தது என்பதை சுமார் 27 வருஷங்களுக்குப் பின்பு அப்போஸ்தலனாகிய பவுலுக்கு கர்த்தர் விளக்கிக் கூறினதை (1 கொரி. 11:23-34) வாசிக்கும்போது,  அங்கும் அதைக்குறித்து ஒன்றும் எழுதப்படவில்லை. ஆகையால் எழுத்தின்படி செய்வதைவிட,  அதின் ஆவியின்படிக்கு செய்யவும்,  வாழவும் நம்மை அர்ப்பணிக்கும் போது மிகுந்து ஆசீர்வாதமாய் காணப்படும். 

கர்த்தருடைய ஜனங்கள் தாழ்மையோடு ஜீவித்து,  ஒருவருக்கொருவர் பணிவிடை செய்து,  அனுதினமும் வசனத்தினால் நம்மைச் சுத்திகரித்து வாழும்போது பாக்கியவான்களாயிருப்பீர்கள்.    

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org